இங்கிலாந்து: இந்திய உணவு விடுதிக்கு தீ வைத்த வழக்கு – 17 வயது சிறுவர்கள் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
இங்கிலாந்தின் லண்டனில் இந்திய உணவு விடுதிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த கும்பல், வாடிக்கையாளர்களை வெளியேற விடாமல் தடுத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கில் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த பலர் காயமடைந்தனர்.
லண்டன்:
இங்கிலாந்தின் லண்டனில் இந்திய உணவு விடுதிக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கில், 17 வயதுடைய இரண்டு சிறுவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டன் கேன்ட்ஸ் ஹில் பகுதியில் ‘இந்தியன் அரோமா’ என்ற இந்திய உணவு விடுதி செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒரு கும்பல் திருடப்பட்ட காரில் அந்த உணவு விடுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த அந்த கும்பல், திடீரென விடுதிக்குள் புகுந்தது.
அப்போது உணவு விடுதிக்குள் சுமார் 8 பேர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை அங்கிருந்து வெளியேற விடாமல் கும்பல் மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், யாரும் தங்களது இடத்தை விட்டு எழுந்து செல்லக்கூடாது என்றும் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு
இதையடுத்து கும்பலைச் சேர்ந்த சிலர் உணவு விடுதியின் கதவை மூடியுள்ளனர். மற்றொருவர் அறை முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாக வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
தீ வேகமாக பரவிய நிலையில், உணவு விடுதிக்குள் இருந்தவர்கள் தப்பிக்க முடியாமல் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் அங்கு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த பலர் பலத்த காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ வைத்த பின்னர் அந்த கும்பல் அங்கு இருந்து தாங்கள் வந்த காரிலேயே தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நீதிமன்றத்தில் விசாரணை
இந்த வழக்கு லண்டனில் உள்ள தி ஓல்டு பெய்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மைக்கேல் கிரீவ், சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவர்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த சம்பவம் லண்டனில் உள்ள இந்திய உணவு விடுதி மற்றும் அங்கு இருந்த வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது குற்றத்தில் தொடர்புடைய சிறுவர்களுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.