தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் தொடர் கனமழையால் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் - ஊட்டி வழித்தடத்தில் சுற்றுலா வந்த கேரளாவைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர், கயிறுகள் மூலம் அனைத்து மாணவர்களையும் பத்திரமாக மீட்டனர்.இதேபோல் கோவை மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றின் மீது மரமும், நிலச்சரிவு மண்ணும் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அந்தப் பேருந்தில் பயணம் செய்த ஐந்து பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும், மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்ட பேருந்து நடத்துநர், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேட்டுப்பாளையம், குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட மலைப்பாதைகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சரிந்தும் பாறைகள் உருண்டு விழுந்தும் கிடக்கின்றன. இதனால் ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் மார்க்கத்தில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாற்றுப் பாதையான காரமடை - மஞ்சூர் வழியிலும் பாறைகள் சரிந்துள்ளதால், பல இடங்களில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாக்களில் செயல்படும் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். மேலும், புகழ்பெற்ற மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் மீட்புப் படையினரும் இணைந்து சீரமைப்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.