போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்த விவகாரம்: வேப்பேரி காவல் நிலையத்தில் சேகர்பாபு நேரில் ஆஜர்!
அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு வேப்பேரி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.400 கோடி மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்த போலீசார், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கே அழைத்து வந்தனர்.
அப்போது காவல் ஆணையர் அலுவலகம் முன்பு திரண்டிருந்த திமுகவினரும், திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, எம்.பி கலாநிதி வீராசாமி உள்ளிட்டோரும் தடுப்புகளை மீறி உள்ளே நுழைய முயன்றனர். அங்கிருந்த இரும்பு கேட்டுகளைத் தள்ளிவிட்டு வலுக்கட்டாயமாக உள்ளே செல்ல முயன்ற அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த சேகர்பாபு மற்றும் கலாநிதி வீராசாமி ஆகியோர் போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகளை மிரட்டும் வகையிலும் அவர்கள் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதன் அடிப்படையில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அதிகாரிகளை காயப்படுத்த முற்படுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் சேகர்பாபு, எம்.பி கலாநிதி வீராசாமி மற்றும் மேலும் 8 பேர் மீது வேப்பேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக இன்று காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என வேப்பேரி போலீசார் சேகர்பாபுவுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். அந்த சம்மனை ஏற்று வேப்பேரி காவல் நிலையத்திற்கு வருகை தந்த சேகர்பாபு, விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் முன்பு நேரில் ஆஜரானார். அப்போது, சம்பவத்தன்று வாக்குவாதத்தின் போது உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்த தனது தரப்பு விளக்கத்தை அவர் போலீசாரிடம் அளித்தார்.

0 Comments
No comments yet. Be the first to comment.