முதலமைச்சராக முதல்முறை புதுக்கோட்டை வரும் விஜய்: களைகட்டும் வரவேற்பும் பலத்த பாதுகாப்பும்!
முதலமைச்சராக பதவியேற்ற பின் முதல்முறையாக புதுக்கோட்டை வரும் விஜய், ரூ.23.25 கோடியில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக 3600 போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், முதல்முறையாக இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இந்த வருகையை முன்னிட்டு அவருக்கு அரசு தரப்பிலும், கட்சி சார்பிலும் மிக பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறும் முக்கிய நிகழ்வில், ரூ.23.25 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை அவர் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார்.
இந்தப் பேருந்து நிலைய திறப்பு விழாவிற்கு முன்பாக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். அங்கு 104 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்குகிறார். அத்துடன், மக்களின் பயன்பாட்டிற்காக பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட அரசுத் திட்டங்களை முறைப்படி திறந்து வைத்தும் சிறப்பிக்கிறார்.
முதலமைச்சரின் வருகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சி மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தலைமையில் சுமார் 3600 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒரு நாள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மாத்தூர், கீரனூர், வெள்ளனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 13 அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு புதுக்கோட்டைக்கு அவர் வர முடியாத நிலையில், தற்போது முதலமைச்சரான பிறகு முதல்முறையாக வருவதால் அவரைக் காண ரசிகர்களும் தொண்டர்களும் அதிக அளவில் திரண்டுள்ளனர். மக்களின் பாதுகாப்புக்காகவும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் 4 கிலோமீட்டர் தூரத்திற்கும், ரோட் ஷோ போன்று வரவேற்பு அளிக்கப்படும் 5 இடங்களிலும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு முதலமைச்சர் இறுதியாக ரோஜா இல்லத்திற்குச் செல்கிறார்.

0 Comments
No comments yet. Be the first to comment.