TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

விஜயபாஸ்கருக்கு ED செக், கூட்டணிக்குள் புகைச்சல்: 5 தொகுதி இடைத்தேர்தல் அக்னிப் பரீட்சையை எதிர்கொள்ளும் விஜய்

Share This Article:

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை விடுத்துள்ள சம்மன், ஊழலற்ற ஆட்சியை முன்னிறுத்தும் தவெக தலைவர் விஜய்க்கு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உட்கட்சிப் பூசல் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அதிருப்திக்கு இடையே, வரவிருக்கும் 5 தொகுதி இடைத்தேர்தலை தவெக அரசு எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதை அலசுகிறது இந்தச் செய்தி.

விஜயபாஸ்கருக்கு ED செக், கூட்டணிக்குள் புகைச்சல்: 5 தொகுதி இடைத்தேர்தல் அக்னிப் பரீட்சையை எதிர்கொள்ளும் விஜய்

தமிழக அரசியலில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசு பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை (ED) விடுத்துள்ள சம்மன் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 2013-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் குட்கா, பான் மசாலா பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், கள்ளச்சந்தையில் பல நூறு கோடி ரூபாய்க்கு குட்கா வியாபாரம் தடையின்றி நடைபெற்றது.

இதற்காக, உணவுப் பாதுகாப்புத் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. 2018 ஏப்ரலில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்றியது. செப்டம்பர் 2018-ல் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் டிஜிபி-க்களின் வீடுகள் உட்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ மெகா ரெய்டு நடத்தியது.

இந்த விவகாரத்தில் பணமோசடி நடந்துள்ளதை விசாரித்த அமலாக்கத்துறை (ED), 2019-ல் சுமார் ரூ.246 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, 2022 ஜூலையில் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது குற்றவியல் வழக்குத் தொடர திமுக அரசு சிபிஐ-க்கு அனுமதி வழங்கியது.


Content image

மேலும் ,2016 முதல் 2021 வரையிலான அமைச்சரவைக் காலத்தில், வருமானத்திற்கு அதிகமாகப் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அக்டோபர் 2021-ல் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப் பதிவு செய்தது.லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிக்கையின்படி, 2016-ல் ரூ.6.41 கோடியாக இருந்த இவர்களின் சொத்து மதிப்பு, 2021-ல் ரூ.57.77 கோடியாக விஸ்வரூபம் எடுத்திருந்தது. கணக்கில் வராத சுமார் ரூ.35.79 கோடி அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்கள் குவிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு, 2023-ல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சட்டவிரோதப் பணம், விஜயபாஸ்கரின் குடும்ப அறக்கட்டளையின் கீழ் இயங்கும் 14 கல்வி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை சுட்டிக்காட்டியது. இதன் அடிப்படையிலேயே, சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என விசாரிக்க அமலாக்கத்துறை (ED) தற்போது சம்மன் அனுப்பியுள்ளது.தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் அடுத்தகட்ட விசாரணைக்காக சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது அடுத்த வாரம் சென்னை மண்டல அலுவலகத்தில் இருவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, விராலிமலை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ-வாக இருந்த சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தார். தற்போது தவெக-வின் முக்கிய நிர்வாகியாகவும் அவர் வலம் வருகிறார்.


Content image

தவெக தலைவர் விஜய், தனது முதல் அரசியல் மாநாட்டில், "முந்தைய ஆட்சிகளில் ஊழல் செய்தவர்களைச் சும்மா விடமாட்டேன்; ஊழல்வாதிகளை கட்சிக்குள் அனுமதிக்க மாட்டேன்" என்று முழங்கினார். ஆனால், கடுமையான ஊழல் வழக்குகளை எதிர்கொள்ளும் ஒரு முன்னாள் அமைச்சரைத் தனது கட்சியில் இணைத்து முக்கியத்துவம் அளிப்பது மக்கள் மத்தியில் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. புதிய கட்சியான தவெக-வுக்கு, அடிமட்ட அளவிலான தேர்தல் அரசியலைக் கையாள அனுபவம் வாய்ந்த உள்ளூர் தலைவர்கள் தேவைப்படுகின்றனர்.

இதற்காகவே, அதிமுகவின் வாக்கு வங்கியையும், நிர்வாகிகளையும் தவெக குறிவைப்பதாகக் கூறப்படுகிறது. தற்போதைய தவெக அரசு உள்ளாட்சித் தேர்தல்களை ஒத்திவைத்துள்ள நிலையில், வலுவாகக் காலூன்ற அதிமுக நிர்வாகிகளை அரவணைப்பது அவசியமாகிறது.அதிமுகவில் இருந்து தவெக-விற்கு நிர்வாகிகள் வருவது ஆரம்பத்தில் தவெக தலைமைக்கு உற்சாகத்தைக் கொடுத்தாலும், தற்போது அது குறைந்துள்ளது. கட்சி தொடங்கியதில் இருந்தே உழைத்து வரும் 'விஜய் மக்கள் இயக்க' (VMI) நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

மாற்றுக்கட்சியில் இருந்து வருபவர்களுக்கு உடனடியாகப் பதவிகள் வழங்கப்படுவதை அடிப்படைத் தொண்டர்கள் விரும்பவில்லை.அதுமட்டுமின்றி சமீபத்தில் நடந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்றாலும் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கி மீதான கேள்விகள் எழுந்துள்ளன. மேலும் தவெக தரப்பில் இருந்து "பிரதமர் வேட்பாளர் விஜய்" என்ற பிம்பம் முன்னிறுத்தப்படுவது காங்கிரஸை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.


Content image

மேலும், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் முக்கியப் போராட்டங்கள் மற்றும் 'SIR' போன்ற முன்னெடுப்புகளுக்கு தவெக அரசு வெளிப்படையான ஆதரவை அளிக்கத் தயங்குவது, காங்கிரஸ் மற்றும் விசிக-வுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், தவெக-வின் அரசியல் நகர்வுகள் பாமக-வை (PMK) நோக்கிச் சாய்கிறதா என்ற விவாதம் எழுந்துள்ளது. சட்டம் ஒழுங்கு, மின்தடை மட்டுமின்றி, தவெக-வின் தெளிவற்ற அரசியல் நிலைப்பாட்டைக் கம்யூனிஸ்டுகள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

தற்போது கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 5 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில்விராலிமலையில் களமிறங்க வாய்ப்புள்ள விஜயபாஸ்கருக்கு வந்துள்ள இந்த அமலாக்கத்துறை சம்மன், தவெக-வுக்கு விழுந்த அரசியல் செக் ஆகும். ஊழலற்ற ஆட்சியைத் தருவேன் என்று கூறிவிட்டு, ஊழல் வழக்கில் சிக்கிய நபர்களுக்காக விஜய் வாக்குக் கேட்பதை மக்கள் எவ்வாறு எடுத்துக்கொள்வார்கள் என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.தனிப்பெரும்பான்மை இல்லாத மைனாரிட்டி அரசை நடத்திக்கொண்டு, கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தியையும், உட்கட்சிப் பூசலையும் சமாளித்து இந்த 5 தொகுதி இடைத்தேர்தலை தவெக சந்திக்க வேண்டியுள்ளது.

இந்த தேர்தல் தவெக அரசின் 6 மாத கால ஆட்சிக்கான 'மார்க் ஷீட்'. அமலாக்கத்துறையின் நெருக்கடி, எதிர்க்கட்சிகளின் விமர்சனம் எனப் பலமுனைத் தாக்குதல்களைத் தாண்டி தவெக இந்த இடைத்தேர்தலை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions