கல்விச் சாதனையாளர்களுக்கு கௌரவம்: 30 தொகுதி மாணவர்களுக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் விஜய் பாராட்டு!
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விதமாக, தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் நடத்தும் கல்வி விருது வழங்கும் விழாவின் முதற்கட்ட நிகழ்வு இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் மாபெரும் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளார். இந்த ஆண்டின் முதற்கட்ட விருது வழங்கும் விழா இன்று (நவம்பர் 4) சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் விஜய் நேரில் சான்றிதழ்களையும் ஊக்கத்தொகையையும் வழங்கி கௌரவிக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு இவ்வாறு கல்வி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் தவெக வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த கல்வி உதவித்தொகை குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வந்தது. அதைப் பூர்த்தி செய்யும் விதமாக, இன்று நடைபெறும் முதற்கட்ட நிகழ்வில் அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கிய 30 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவச் செல்வங்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
விழாவுக்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. பாராட்டுப் பெறும் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் இன்று காலை 11 மணிக்கு விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். அங்கு அவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி அளவில் நடைபெறும் முக்கிய நிகழ்வில், முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தனது கரங்களால் ஊக்கத்தொகையினையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்துகிறார்.
இந்த விழா குறித்து அமைச்சரும் தவெக பொதுச் செயலாளருமான ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்காலச் சமுதாயம் வளமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் திகழ வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்திச் செயலாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதோடு, அவர்களை மேலும் பல சாதனைகள் புரியத் தூண்டும் விதமாகவே இந்தச் சிறப்பான பாராட்டு விழா தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments
No comments yet. Be the first to comment.