இஸ்ரேலில் 3,300 ஆண்டுகள் பழமையான எகிப்திய தாயத்து கண்டுபிடிப்பு... பள்ளி மாணவருக்குக் கிடைத்த வரலாற்றுப் பொக்கிஷம்!
இஸ்ரேலின் டெல் கெசர் தேசியப் பூங்காவில் பள்ளிச் சுற்றுலா சென்ற 17 வயது அமெரிக்க மாணவர் ஷிலோ அட்டூன், 3,300 ஆண்டுகள் பழமையான எகிப்திய ஸ்காரப் தாயத்தைக் கண்டுபிடித்துள்ளார். இரண்டு நாகப்பாம்புகளின் உருவங்கள் பொறிக்கப்பட்ட இந்த அரிய தாயத்து, வெண்கலக் காலத்தைச் சேர்ந்தது எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். பண்டைய எகிப்தியர்களின் நம்பிக்கையில் பாதுகாப்பு, அரச அதிகாரம் மற்றும் மறுபிறப்பின் அடையாளமாகக் கருதப்பட்ட இந்தத் தாயத்து, அக்காலத்தில் எகிப்திய நாகரிகத்திற்கும் கானான் பகுதிக்கும் இடையே இருந்த கலாசாரத் தொடர்புகளை வெளிப்படுத்துகிறது.
இஸ்ரேலில் பள்ளிச் சுற்றுலா சென்ற 17 வயது அமெரிக்க மாணவருக்கு எதிர்பாராத வகையில் 3,300 ஆண்டுகள் பழமையான எகிப்திய தாயத்து ஒன்று கிடைத்துள்ளது. இந்த அரிய தொல்பொருள் கண்டுபிடிப்பு வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.
சுற்றுலாவின்போது கிடைத்த பழங்காலப் பொருள்!
அமெரிக்காவைச் சேர்ந்த ஷிலோ அட்டூன் (Shiloh Attoun) என்ற 17 வயது மாணவர், இஸ்ரேலில் உள்ள முஸ் உயர்நிலைப் பள்ளியின் கல்விச் சுற்றுலா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது, ஜூடியன் தாழ்நிலப் பகுதியில் அமைந்துள்ள டெல் கெசர் தேசியப் பூங்காவிற்கு தனது ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களுடன் சென்றிருந்தார்.
அங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தபோது, தரையில் வித்தியாசமான சிறிய பொருள் ஒன்று கிடப்பதைக் கவனித்தார். அதை எடுத்துப் பார்த்தபோது, அது மிகவும் பழமையான பொருளாக இருக்கலாம் என்று சந்தேகமடைந்தார்.
இதையடுத்து, தனது ஆசிரியர் பென்ஜி ஹெய்னிடம் அந்தப் பொருளைக் காண்பித்தார். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த ஆசிரியர், உடனடியாக இஸ்ரேல் தொல்பொருள் ஆணையத்திடம் தகவல் தெரிவித்தார்.
புனித வண்டு வடிவ தாயம்...
அவர் அதை எடுத்து பார்த்தபோது, அது பண்டைய எகிப்தியர்கள் பயன்படுத்திய அரிய தாயம் என்பது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து இஸ்ரேல் தொல்பொருள் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் விரைந்து வந்து அந்த தாயத்தை ஆய்வு செய்தனர்.
பண்டைய எகிப்தியர்களுக்கு ஸ்காரப் ஏன் முக்கியம்?
பண்டைய எகிப்தியர்கள் ஸ்காரப் வண்டை புனிதமானதாகக் கருதினர். இந்த வண்டு சாண உருண்டையை உருட்டிச் சென்று அதற்குள் முட்டையிடுவதால், அதிலிருந்து புதிய உயிர்கள் உருவாகின்றன.
இதனை அடிப்படையாகக் கொண்டு, மரணத்திற்குப் பிறகான மறுபிறப்பு, புதிய வாழ்க்கை மற்றும் படைப்பின் அடையாளமாக ஸ்காரப் வண்டு பார்க்கப்பட்டது.
இந்த வடிவத்தில் உருவாக்கப்பட்ட தாயத்துகள் பாதுகாப்புக்காகவும், சில நேரங்களில் முத்திரைகளாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இஸ்ரேலில் இதுபோன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்படுவது, சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் எகிப்தியர்களின் அரசியல் மற்றும் கலாசாரத் தாக்கம் இருந்ததை எடுத்துக்காட்டுகிறது.
தொல்பொருள் ஆணையத்திடம் ஒப்படைத்த மாணவர்!
தனக்குக் கிடைத்த அரிய பொருளை உடனடியாக அதிகாரிகளிடம் ஒப்படைத்த மாணவர் ஷிலோ அட்டூனின் பொறுப்புணர்வைப் பாராட்டிய இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம், அவருக்குச் சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளது.
இந்தப் பழங்காலத் தாயத்து இஸ்ரேலின் தேசிய தொல்பொருள் சேகரிப்பில் பாதுகாக்கப்பட உள்ளது.
மேலும், இதுபோன்ற தொல்பொருட்கள் பொதுமக்களுக்குக் கிடைத்தால் அவற்றை எடுத்துச் செல்லாமல், கண்ட இடத்திலேயே விட்டுவிட்டு உடனடியாகத் தொல்பொருள் ஆணையத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஒரு பள்ளிச் சுற்றுலாவில் மாணவருக்குத் தற்செயலாகக் கிடைத்த இந்தச் சிறிய தாயத்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்திய நாகரிகத்தின் வரலாற்றை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது

0 Comments
No comments yet. Be the first to comment.