வசூல் மன்னன் விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி வந்தாச்சு! முதலமைச்சரின் பிறந்தநாள் பரிசாக வெளியாகும் தளபதியின் கடைசி படம்!
சென்சார் சான்றிதழ் சிக்கல், ஆன்லைன் லீக் மற்றும் சட்டமன்றத் தேர்தல் என பல தடைகளைத் தாண்டி, பாக்ஸ் ஆபீஸ் மன்னன் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக 'புக் மை ஷோ' தளம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் தளபதி விஜய் முதன்முறையாகக் கைகோர்த்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. இது நடிகர் விஜய்யின் 69-வது மற்றும் கடைசித் திரைப்படம் என்பதால், ஒட்டுமொத்தத் திரை உலகமும், ரசிகர்களும் இந்த படத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துள்ளனர். ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான அரசியல் அதிரடி விருந்தாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ட்ரெண்டாகி வரும் நிலையில், கே.வி.என் (KVN) நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
அடுத்தடுத்து முட்டுக்கட்டை போட்ட சென்சார் மற்றும் லீக் பிரச்சனைகள்!
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கே திரைக்கு வரவிருந்த 'ஜனநாயகன்' திரைப்படம், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் (CBFC) சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் தள்ளிப்போனது. இதற்கென படக்குழு நீதிமன்றத்தை நாடியும் காலதாமதம் ஏற்பட்டதால், வழக்கை வாபஸ் பெற்று ரிவைசிங் கமிட்டிக்குச் சென்றனர்.
இப்படியே நாட்கள் நகர, யாரும் எதிர்பாராத விதமாக படம் இணையதளங்களில் லீக்காகி படக்குழுவிற்கும், தமிழ் திரையுலகிற்கும் அதிர்ச்சியைத் தந்தது. மேலும், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியதால், அரசியல் கதைக்களம் கொண்ட இப்படத்தை அப்போது வெளியிட முடியாத இக்கட்டான சூழல் உருவானது.
புக் மை ஷோவில் வெளியான ரிலீஸ் அப்டேட்!
தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெரும் வெற்றி பெற்று, அவர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் முடிவடைந்த நிலையில், "ஜனநாயகன் படம் எப்போது வரும்?" என்ற கேள்வியை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எழுப்பத் தொடங்கினர். அண்மையில் தயாரிப்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, படம் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் வெளியாகும் என அறிவித்திருந்தார்.
அதற்கேற்றார்போல், தற்போது முன்னணி டிக்கெட் முன்பதிவு தளமான 'புக் மை ஷோ' (BookMyShow)-வில், 'ஜனநாயகன்' திரைப்படம் வரும் ஜூன் 2026-ல் வெளியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 22-ஆம் தேதி முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால், அவரது பிறந்தநாளை முன்னிட்டோ அல்லது அதற்கு சில நாட்களுக்கு முன்போ படம் உலகமெங்கும் மிக பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

0 Comments
No comments yet. Be the first to comment.