"முதலில் நல்ல தாயாக வேண்டும்... பிறகுதான் IAS ஆகலாம்!" - உத்தரப் பிரதேச ஆளுநர் பேச்சு சர்ச்சை!
"பெண்கள் முதலில் சிறந்த தாயாக மாற வேண்டும்; அதன் பிறகு IAS அதிகாரியாகலாம்" என்ற உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலின் பேச்சு சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பெண்களின் கல்வி, குடும்பப் பொறுப்பு மற்றும் தாய்மையின் முக்கியத்துவம் குறித்து பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
கான்பூரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் 41-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுநர், பெண்கள் கல்வி மற்றும் தொழிலில் முன்னேறுவதோடு குடும்பப் பொறுப்புகளையும் சமமாக ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாணவிகளை நோக்கி உரையாற்றிய அவர், "நீங்கள் IAS அதிகாரியாகவோ, ஆசிரியராகவோ ஆகலாம். ஆனால் அதற்கு முன்பு சிறந்த தாயாக மாற வேண்டும். வீட்டில் உணவு சமைப்பதையும் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். திருமணத்திற்குப் பிறகும் பெண்கள் தங்களது கல்வியை நிறுத்தக்கூடாது. தங்களது அறிவு மற்றும் திறமைகளை குடும்பம், சமூகம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்தக் கருத்துகள் வெளியானதும், சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பதிவாகின. சிலர், குடும்ப மதிப்புகள் மற்றும் பெற்றோர் பொறுப்பை வலியுறுத்தும் வகையிலேயே ஆளுநர் பேசியதாகக் கூறி அவரது கருத்தை ஆதரித்தனர். மற்றொரு தரப்பினர், பெண்களின் தொழில் கனவுகளை தாய்மை என்ற ஒரே அளவுகோலுடன் இணைத்து பார்க்கக் கூடாது என்றும், பெண்களின் வாழ்க்கைத் தேர்வுகள் அவர்களது தனிப்பட்ட முடிவாக இருக்க வேண்டும் என்றும் விமர்சித்தனர்.
உரையின் போது கல்வி என்பது பட்டங்கள் மற்றும் மதிப்பெண்கள் மட்டுமல்ல என்றும், நல்ல பண்புகள், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் குடும்ப மதிப்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆனந்திபென் படேல் வலியுறுத்தினார்.
மேலும், குழந்தைகள் பள்ளி மற்றும் கல்லூரியில் சேர்ந்த பிறகும் பெற்றோர் அவர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும், சிறிய அலட்சியமும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக வளாகங்களில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். ராஜ்பவனால் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழு மேற்கொண்ட ஆய்வின்போது, உணவு விநியோகப் பெட்டிகள் மூலம் போதைப்பொருள் கடத்தப்பட்ட சம்பவங்கள் கண்டறியப்பட்டதாகவும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை மற்றும் பிற குற்றங்கள் இன்னும் அதிகரித்து வருவதாகவும், சமூகத்தில் ஒழுக்க மதிப்புகள் குறைவதே அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்தார். கல்வியுடன் சேர்த்து மனிதநேயமும் ஒழுக்கமும் சமமாக வளர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு முன்னரும், வேறு ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆனந்திபென் படேல், திருமணத்திற்கு முன் இளைஞர்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்த பிறகே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியிருந்தார்.
ஆளுநரின் சமீபத்திய கருத்துகள் குறித்து சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பெண்களின் கல்வி, தொழில், குடும்ப வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட தேர்வுகள் குறித்து சமூகம் எந்த அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பது மீண்டும் ஒரு முறை பொதுவெளி விவாதமாக மாறியுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.