யாருடைய ஆசைக்காக புதிய தலைமைச் செயலகம் கட்டப்படுகிறது? - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
பட்டினப்பாக்கத்தில் மீனவர்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க முடிவெடுத்துள்ள த.வெ.க. அரசின் தன்னிச்சையான முடிவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜோதிடர் ஒருவர் கூறியதற்காகக் கடற்கரையைப் பார்த்தபடி முதலமைச்சரின் அலுவலகம் அமைய வேண்டும் என இந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் செய்திகள் வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இம்முடிவை எதிர்த்துப் போராடும் மீனவ மக்களுக்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என்றும், அரசு பின்வாங்கும் வரை மீனவர்களுடன் உறுதியாகத் துணை நிற்போம் என்றும் எச்சரித்துள்ளார்.
சென்னை பட்டினபாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் (Foreshore Estate) பகுதியில், மீனவர்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதாரத்தையும் ஒட்டுமொத்தமாக அழிக்கும் வகையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க உத்தேசித்துள்ள த.வெ.க. (தமிழக வெற்றிக் கழகம்) அரசின் தன்னிச்சையான முடிவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
மீனவச் சங்கங்கள் அண்ணா அறிவாலயத்தில் சந்திப்பு:
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்குத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், அதற்கு அப்பகுதி மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவைக் கோரி, பல்வேறு மீனவச் சங்கங்களின் பிரதிநிதிகள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்துப் பேசினர்.
ஜோதிடர் ஆலோசனையா? ஸ்டாலின் கேள்வி:
தலைமைச் செயலகம் கட்டுவதற்குத் தமிழகத்தில் எத்தனையோ மாற்று இடங்கள் இருக்கின்றன. ஏற்கனவே, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் கட்டப்பட்ட ஓமந்தூரார் அரசினர் தோட்டம் வளாகம் பயன்பாட்டுக்குத் தயாராக உள்ளது. வேண்டுமென்றால், அங்கே தற்போது செயல்பட்டு வரும் பன்நோக்கு மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, மீண்டும் அதனைத் தலைமைச் செயலகமாகப் பயன்படுத்தலாம்.
ஜோதிடர் ஒருவர் சொன்னார்" என்பதற்காக, கடற்கரையைப் பார்த்தபடி முதலமைச்சரின் அலுவலகம் அமைய வேண்டும் என்ற ஒற்றைக் காரணத்திற்காகப் பட்டினப்பாக்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன. யாருடைய ஆசைக்காக மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து இந்த முடிவு எடுக்கப்படுகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாணையை மறைக்கும் அமைச்சர்கள் மோசடிச் செயல்:
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் கடல்சீற்றத்தால் பாதிக்கப்படும் மீனவ மக்களுக்காக 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்குப் பரிசீலிக்கப்பட்ட இடத்தில்தான், தற்போது புதிய தலைமைச் செயலகம் கட்ட த.வெ.க. அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.ஆனால், வருவாய்த்துறை மற்றும் வீட்டுவசதி வாரியத்திற்குச் சொந்தமான 25.55 ஏக்கர் நிலத்தை அலகீடு செய்து கொள்கை அளவிலான ஒப்புதல் (In-principle approval) அரசாணை வெளியான பின்பும், "திட்ட அறிக்கை மட்டும்தான் கோரியிருக்கிறோம், முதலமைச்சர் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை" என த.வெ.க. அமைச்சர்கள் தேர்தல் கூட்டங்களில் மடைமாற்றிப் பேசுவது மக்களை ஏமாற்றும் மோசடிச் செயலாகும். முதலமைச்சருக்கே தெரியாமல் இந்த அரசாணை வெளியானதா அல்லது முதலமைச்சரை டம்மியாக வைத்துக்கொண்டு இயக்கும் "Super CMs" யார் என்றும் ஸ்டாலின் சாடியுள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.