நடிகைகளை குறிவைத்து ஒரு கூட்டம் சுற்றுகிறது – மிருணாள் தாக்கூர்
நடிகைகளைத் தரம் தாழ்த்துவதற்காகவே ஒரு கூட்டம் காத்திருக்கிறது என நடிகை மிருணாள் தாக்கூர் தெரிவித்துள்ளார். சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் குறித்தும் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
சினிமா துறையில் நடிகைகளை மட்டும் குறிவைத்து விமர்சிப்பதற்காகவே ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் எப்போது தவறு செய்வார்கள், எப்போது அவர்களை விமர்சிக்கலாம் என்று கண்கொத்திப் பாம்பாகக் காத்திருக்கிறார்கள் என நடிகை மிருணாள் தாக்கூர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், தன்னைப் பற்றிப் பரப்பப்படும் தேவையற்ற விமர்சனங்கள் மற்றும் வதந்திகளைக் கண்டுகொள்ளாமல் தனது பாதையில் தொடர்ந்து பயணிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.மிருணாள் தாக்கூர்.
சின்னத்திரையில் தொடங்கிய திரைப் பயணம்
இந்தி சின்னத்திரை தொடர்களில் நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானவர் மிருணாள் தாக்கூர். சிறுவயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்துள்ளது. சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருந்த காலத்திலேயே திரைப்பட நடிகையைப் போலத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு ஆர்வத்துடன் நடித்து வந்துள்ளார்.
ஆரம்பகாலத்தில் அவரது நடிப்பைப் பார்த்து சிலர் கேலி செய்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் தனது முயற்சியைத் தொடர்ந்து வந்தார். பின்னர் கிடைத்த திரைப்பட வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அவர், படிப்படியாகத் தனது நடிப்புத் திறமையால் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார்.
தென்னிந்திய சினிமாவில் கிடைத்த வரவேற்பு
பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த மிருணாள் தாக்கூர், பின்னர் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார். துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த ‘சீதா ராமம்’ திரைப்படம் அவருக்குத் தென்னிந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் ‘தி ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படத்திலும் நடித்தார். மொழி வேறுபாடுகளைக் கடந்து தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த மிருணாள், தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகைகளை மட்டும் குறிவைத்து விமர்சனம்
தனது திரைப் பயணம் குறித்துப் பேசிய மிருணாள் தாக்கூர், சினிமாவில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சினிமாவில் பல்வேறு கஷ்டங்களையும், விமர்சனங்களையும் கடந்து தனது பாதையில் பயணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, நடிகர்களைக் காட்டிலும் நடிகைகள்தான் அதிகமாக விமர்சிக்கப்படுவதாகவும், அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாகக் கவனித்து குறை கூறுவதற்காகவே சிலர் காத்திருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், நடிகைகள் எப்போது தவறு செய்வார்கள், அப்போது அவர்களை எப்படியெல்லாம் விமர்சிக்கலாம் என்று ஒரு கூட்டமே காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காதல் மற்றும் டேட்டிங் வதந்திகளால் மனவேதனை
தன்னைப் பற்றிப் பல்வேறு காலகட்டங்களில் தேவையற்ற வதந்திகள் பரப்பப்பட்டதாகவும் மிருணாள் தெரிவித்துள்ளார். குறிப்பாக, யாருடன் காதல், யாருடன் டேட்டிங் எனத் தனது தனிப்பட்ட வாழ்க்கையை மையமாக வைத்து பலரும் தங்களுக்குத் தோன்றிய கருத்துகளைப் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய விமர்சனங்கள் சில நேரங்களில் எல்லை மீறிச் செல்வதாகவும், அதற்கெல்லாம் பதிலளித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விமர்சனங்களைக் கடந்து செல்லும் மனப்பக்குவம்
தனக்கு எதிராக எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அவற்றால் தனது பயணம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக மிருணாள் கூறியுள்ளார்.
“நான் ஒரு நதியைப் போல எனது பாதையில் சென்று கொண்டிருக்கிறேன்''. நீங்கள் கற்களை வீசினாலும், பூக்களை வீசினாலும் நான் எனது வேலையைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பேன். எல்லாவற்றையும் மறக்கவும், மன்னிக்கவும் கற்றுக்கொண்டு வருகிறேன். அதைவிட எதையும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லவும் சினிமா எனக்குக் கற்றுக்கொடுத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை நோக்கி எத்தனை விமர்சனங்கள் அம்புகளைப் போலப் பாய்ந்தாலும், அதற்கெல்லாம் ‘ஐ டோன்ட் கேர்’ என்ற மனநிலையிலேயே இருப்பேன் என்றும் மிருணாள் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.