‘வெற்றிப்பயணம்’ திட்டம் தொடக்கம்: பெண்களுக்கு இலவச டிக்கெட் வழங்கினார் முதல்வர் விஜய் !!
தமிழ்நாட்டில் பெண்கள், மாணவிகள் மற்றும் திருநங்கைகளின் இலவச பேருந்து பயணத்தை விரிவுபடுத்தும் வகையில் ‘வெற்றிப்பயணம்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, பயணிகளுக்கு இலவச பயண டிக்கெட்டுகளை வழங்கினார். திட்டத்தை செயல்படுத்த ஆண்டுதோறும் சுமார் ரூ.6,000 கோடி செலவாகும் என அரசு கணித்துள்ளது.
‘வெற்றிப்பயணம்’
தமிழ்நாட்டில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ‘வெற்றிப்பயணம்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்ற நிலையில், முதலமைச்சர் விஜய் திட்டத்தை தொடங்கி வைத்து, பெண்களுக்கு இலவச பயண டிக்கெட்டுகளை வழங்கினார்.
பெண்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக பேருந்து போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். வேலைக்குச் செல்வது, கல்வி நிலையங்களுக்குச் செல்வது, மருத்துவமனைகள், சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் பெண்களுக்கு பேருந்து கட்டணம் ஒரு முக்கிய செலவாக இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண வசதியை விரிவுபடுத்தும் நோக்கில் ‘வெற்றிப்பயணம்’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வகை பேருந்துகளில் பயணிக்கலாம்
இந்தத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கூடுதல் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. குறிப்பாக நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் குறிப்பிட்ட வகை அரசு பேருந்துகள் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும், எக்ஸ்பிரஸ், LSS, டீலக்ஸ் மற்றும் புறநகர் சாதாரண பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் இயக்கப்படும் குறிப்பிட்ட சாதாரண பேருந்துகளிலும் இந்த இலவச பயண வசதி வழங்கப்பட உள்ளது.
யார் யார் பயன்பெறுவார்கள்?
‘வெற்றிப்பயணம்’ திட்டத்தின் மூலம் பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவிகள் மற்றும் திருநங்கைகள் பயன்பெற உள்ளனர். இதற்காக தனியாக வருமான வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என்றும், பயணங்களின் எண்ணிக்கைக்கும் கட்டுப்பாடு இல்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தினசரி வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி, கல்லூரி மாணவிகள், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக பயணம் செய்யும் பெண்களும் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும்.
12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள்
‘வெற்றிப்பயணம்’ திட்டத்தின் கீழ் மொத்தம் 12,692 அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த இலவச பயண வசதி மேலும் அதிகமான வழித்தடங்கள் மற்றும் பேருந்துகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.
குறிப்பாக வேலை மற்றும் கல்வி தொடர்பாக தினசரி நீண்ட தூரம் பயணம் செய்யும் பெண்களுக்கு இந்த விரிவாக்கம் பயனுள்ளதாக இருக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ.6,000 கோடி செலவு
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.6,000 கோடி செலவினம் ஏற்படும் என அரசு கணித்துள்ளது. பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்தை விரிவுபடுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்பை அரசு ஈடு செய்யும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.