மதம் மாறினால் இடஒதுக்கீடு இல்லை: உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!
இந்து மதத்திலிருந்து இஸ்லாமிற்கு மாறுபவர்கள், தங்களது முந்தைய சாதி அடையாளத்தைக் காட்டி இடஒதுக்கீடு பெற முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்துள்ளது.
இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறுபவர்கள், தங்களது முந்தைய சாதி அடையாளத்தைக் காட்டி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டைப் பெற முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்துள்ளது.
மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் ஸ்ரீ சந்திரசேகர் அடங்கிய அமர்வு தற்போது தள்ளுபடி செய்துள்ளது. ஒருவர் இஸ்லாமுக்கு மாறுவதால் மட்டுமே அவரை முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட பிரிவினராகக் கருத முடியாது என்றும், அவரது பழைய சாதி அந்தஸ்தை இதற்குப் பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் விளக்கமளித்துள்ளனர்.
மேலும், அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்து, சீக்கியம் மற்றும் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே பட்டியலினத்தவராக (SC) கருதப்பட முடியும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ஒருவேளை மதம் மாறியவர் மீண்டும் இந்து மதத்திற்கே திரும்பினாலும், அவரது பழைய அடையாளத்தை மட்டும் வைத்து உடனடியாக இடஒதுக்கீடு வழங்க முடியாது என்றும், அதற்கான தனிப்பட்ட சூழல்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் கடந்த 2015-ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறி 'சமீர் அகமது' எனப் பெயர் மாற்றிக்கொண்டார். அவர் தனக்கு 'முஸ்லிம் லெப்பை' சமூகச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்ததை வட்டாட்சியர் நிராகரித்தார். இதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தை நாடியதே தற்போது இந்த முக்கியத் தீர்ப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.