இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் வழக்கத்தை விட அதிகமாகப் பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் நவம்பரில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், வெள்ள அபாயம் குறித்த எச்சரிக்கையும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக விடைபெற்று, வடகிழக்கு பருவமழை தீவிரமாகத் தொடங்கியுள்ளது. வடமாநிலங்களில் வறண்ட வானிலை நிலவும் அதே வேளையில், தமிழகத்துக்குள் குளிர்ந்த காற்று ஊடுருவி வருவதால் மாநிலத்தின் வானிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வருகிற 20-ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்வதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு பருவமழையின் இயல்பை 'எல்நினோ' என்னும் வானிலை நிகழ்வு முற்றிலுமாக மாற்றியுள்ளது. கடந்த ஜூன் மாதம் உருவான இந்த எல்நினோ காரணமாகவே தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் ஏமாற்றியது. ஆனால், தற்போது அந்த எல்நினோ படிப்படியாக தீவிரமடைந்து 'சூப்பர் எல்நினோ'வாகவும், அதன்பின் 'தீவிர எல்நினோ'வாகவும் பெரும் உருவெடுத்துள்ளது.வானிலை நிபுணர்கள் கூறுகையில், இந்த தீவிர எல்நினோ விளைவால் தென்மேற்கு பருவமழைக்கு முற்றிலும் நேர்மாறாக, வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் முழுவதும் வரலாறு காணாத அளவு மிக அதிக மழைப்பொழிவை சந்திக்கும் என்று எச்சரிக்கின்றனர் .
பொதுவாக அக்டோபர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்திற்கு 44 சதவீத மழை கிடைப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக 60 சென்டிமீட்டருக்கும் மேல் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உள்மாவட்டங்களை விட கடலோர மாவட்டங்கள் கடும் மழையைச் சந்திக்கப் போகின்றன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய கடலோர மாவட்டங்களில் வழக்கத்தை விட மழை வெளுத்து வாங்கும். இந்த பகுதிகளில் சாதாரண நாட்களைத் தாண்டி, ஒரே நாளில் 20 சென்டிமீட்டர் முதல் 24 சென்டிமீட்டர் வரை அதீத கனமழை கொட்டித் தீர்க்க அதிக வாய்ப்புகள் உள்ளன. சென்னை வானிலை ஆய்வு மையமும் இந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கெல்லாம் மேலாக, வரும் நவம்பர் மாதம் தமிழகத்திற்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையப் போகிறது. நவம்பர் மாதத்தில் சென்னை மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிதீவிர மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில், இந்த பகுதிகளில் ஒரே நாளில் 40 சென்டிமீட்டர் முதல் 50 சென்டிமீட்டர் வரை மிகக் கடுமையான பேய்மழை கொட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இது நிகழ்ந்தால், சென்னை நகரம் முழுவதும் மழைநீரில் தத்தளித்து மாபெரும் வெள்ளத்தில் மிதக்கும் மிகக் கடுமையான அபாயம் உள்ளது. எனவே, அரசு நிர்வாகமும் பொதுமக்களும் வரப்போகும் இந்த பெருமழையை எதிர்கொள்ள இப்போதே தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் .

0 Comments
No comments yet. Be the first to comment.