4 அடி உயர இரும்புத் தகடுகளால் மூடப்பட்ட மாமல்லபுரம் ரெசார்ட்டில் எம்.எல்.ஏ-க்களுடன் சி.எம் விஜய் ரகசிய ஆலோசனை!
எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்கும் வியூகமாக, மாமல்லபுரத்தில் இரும்புத் தகடுகளால் பாதுகாக்கப்பட்ட தனியார் ரெசார்ட்டில் தவெக எம்.எல்.ஏ-க்களுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்து, நவம்பர் 13-ஆம் தேதியோடு ஆறு மாதங்கள் நிறைவடைகின்றன. சட்டமன்ற மரபுகளின்படி, ஆறு மாதங்கள் முடிந்தவுடன் எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர முடியும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தவெக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அரசியல் நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக, முதல்வர் விஜய் தனது கட்சியின் 109 எம்.எல்.ஏ-க்களையும் அவசரமாக சென்னைக்கு அழைத்துள்ளார். அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மூலம் எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், கூட்டம் எங்கு நடைபெறும் என்ற இடம் கடைசி வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை 9 மணிக்குத் தான், மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ரெசார்ட்டில் 11 மணிக்குக் கூட்டம் தொடங்கும் என்ற தகவல் எம்.எல்.ஏ-க்களுக்கு வழங்கப்பட்டது.
வழக்கமாக பனையூரில் நடைபெறும் கூட்டத்திற்கு மாறாக, இம்முறை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் திறந்த புல்வெளிப் பகுதியில் இந்த எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெறுகிறது. ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், வெளியிலிருக்கும் தொண்டர்கள் மற்றும் மற்றவர்களுக்கு உள்ளே நடப்பது எதுவும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவும் விடுதியைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, விடுதியின் சுற்றுச்சுவரில் 4 அடி உயரத்துக்கு இரும்புத் தகரங்களை வைத்து பிரத்யேக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் பட்சத்தில், தவெக எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்க திமுக மற்றும் அதிமுக தரப்பில் திரைமறைவு முயற்சிகள் நடக்கலாம் என முதல்வர் தரப்பு கருதுகிறது. இதைத் தடுத்து நிறுத்தி, எம்.எல்.ஏ-க்களை ஒருங்கிணைக்கவே இந்த ரகசிய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எம்.எல்.ஏ-க்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு அதே விடுதியில் அறைகளும் புக் செய்யப்பட்டுள்ளதால், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.