மாமல்லபுரத்தில் சர்ப்ரைஸ்: எம்எல்ஏக்களை பரிசுகளால் திக்குமுக்காடச் செய்த முதலமைச்சர் விஜய்!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், முதலமைச்சர் விஜய் அனைவருக்கும் பட்டு உடைகளை தீபாவளிப் பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
மாமல்லபுரத்தில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. தவெக ஆட்சியமைத்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டப் பணிகளை முடுக்கி விடுவதற்காகவும், சில முக்கிய ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் அமைச்சர்களான என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், எம்எல்ஏக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு சிறிய சர்ப்ரைஸ் காத்திருந்தது. அங்கு வந்த அனைத்து தவெக எம்எல்ஏக்களுக்கும் முதலமைச்சர் விஜய் தனது தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்து, சிறப்புப் பரிசுகளை வழங்கினார். குறிப்பாக, ஆண் எம்எல்ஏக்களுக்கு பட்டு வேட்டி மற்றும் பட்டு சட்டைகளும், பெண் எம்எல்ஏக்களுக்கு பட்டுப் புடவைகளும் பரிசாக வழங்கப்பட்டன.
வெறும் பரிசுகளை மட்டும் வழங்கிவிட்டுச் செல்லாமல், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருடனும் அவர் தனித்தனியாக நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டார். சமீபகாலமாக எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்கள் மற்றும் தொகுதிப் பிரச்சனைகளால் சோர்வடைந்திருந்த எம்எல்ஏக்களுக்கு, முதலமைச்சரின் இந்த அன்பான வரவேற்பு உற்சாகத்தை அளித்தது.
பரிசுகள் ஒருபுறம் இருக்க, கட்சிப் பணிகள் குறித்து சில கடுமையான அறிவுரைகளையும் அவர் வழங்கினார். எதிர்க்கட்சிகள் விரிக்கும் வலையில் யாரும் விழுந்துவிடக் கூடாது என்றும், எப்போதுமே கவனத்துடனும் கண்ணியத்துடனும் மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கண்டிப்புடன் கூறினார். மக்கள் பணிகளைச் செய்ய உள்ளூர் அதிகாரிகள் சரிவர ஒத்துழைப்பதில்லை என்று சில எம்எல்ஏக்கள் புகார் அளித்தபோது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர்களைத் தனது சொந்த டைரியில் குறித்துக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்தார்.

0 Comments
No comments yet. Be the first to comment.