ராமேஸ்வரம் அருகே கொடூரம்: மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் உயிரோடு புதைத்த உறவினர்கள்; 4 பேர் கைது!
ராமேஸ்வரம் அருகே வீட்டில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை மாமனார் மற்றும் நாத்தனார் சேர்ந்து உயிரோடு புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த சம்பை பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகபாண்டி - யோகநந்தினி தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இரண்டாவது முறையாகக் கருவுற்றிருந்த யோகநந்தினிக்கு வீட்டில் இருந்தபோது திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்குச் செல்ல முயன்றபோது வலி அதிகமானதால், மருத்துவப் பயிற்சி ஏதுமில்லாத அவரது நாத்தனார் முனீஸ்வரி வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். அப்போது யோகநந்தினிக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிரசவத்திற்குப் பிறகு யோகநந்தினிக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதால், தன்னையும் குழந்தையையும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி அவர் கெஞ்சியுள்ளார். ஆனால், "நீ முதலில் ஆட்டோவில் ஏறிப் போ, குழந்தையைப் பின்னால் எடுத்து வருகிறோம்" என்று கூறி அவரை மட்டும் மாமனாரும் நாத்தனாரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில், ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்ததை ஏற்க மறுத்த உறவினர்கள், அந்தப் பச்சிளம் குழந்தையை வீட்டின் பின்புறம் குழி தோண்டி உயிரோடு புதைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யோகநந்தினிக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பிறந்த குழந்தை எங்கே எனக் கேட்டுள்ளனர். அதற்கு உறவினர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததுடன், குழந்தை இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதில் சந்தேகமடைந்த மருத்துவர்கள் உடனடியாக ராமேஸ்வரம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நாத்தனார் முனீஸ்வரியிடம் நடத்திய தீவிர விசாரணையில் குழந்தையைப் புதைத்த உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, முனீஸ்வரியை வீட்டிற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், பின்புறம் புதைக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தையின் சடலத்தைத் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக நாகபாண்டியின் தந்தை கிருஷ்ணன், தாயார் மற்றும் சகோதரி முனீஸ்வரி உட்பட 4 பேரைக் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.