மலேசியா செல்ல இனி விசா கட்டாயம்: இந்தியர்களுக்கான இலவச அனுமதிக்கு 2027 முதல் முற்றுப்புள்ளி!
இந்தியப் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 30 நாள் விசா விலக்கு சலுகையை 2027 ஜனவரி 1 முதல் மலேசிய அரசு ரத்து செய்கிறது. புதிய விதிமுறைகள் மற்றும் ஆன்லைன் விண்ணப்ப விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
மலேசியாவுக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிடும் இந்தியர்களுக்கு அந்நாட்டு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த 30 நாள் விசா விலக்கு சலுகை வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதனால், அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் மலேசியாவுக்குப் பயணம் செய்யும் இந்தியர்கள் அனைவரும் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பாகவே செல்லுபடியாகும் விசாவை எடுத்திருக்க வேண்டியது கட்டாயமாகிறது. எனினும், இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை மலேசியா செல்பவர்கள் தற்போதைய விசா இல்லாத பயணச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சுற்றுலாப் பயணிகளுக்காக வழங்கப்பட்ட இந்த விசா சலுகையைப் பலர் தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக வேலை தேடிச் செல்வது அதிகரித்ததே இந்த அதிரடி முடிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதமே கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது. போலி ஏஜென்டுகளின் பேச்சை நம்பி சுற்றுலா விசாவில் வேலைக்குச் சென்றால், சட்ட நடவடிக்கை மற்றும் சிறைத்தண்டனை போன்ற சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
புதிய விதிமுறைகளின்படி, வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இந்தியர்கள் 'MyVISA' என்ற மலேசிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விதி என்னவென்றால், விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு அல்லது கட்டணம் செலுத்தப்படாமல் 7 வேலைநாட்களுக்கு மேலாக நிலுவையில் இருந்தால், அந்த விண்ணப்பம் தானாகவே காலாவதியாகிவிடும். அக்டோபர் 1 முதல் அமலில் உள்ள இந்த விதி செப்டம்பர் 1-க்கு முன் போடப்பட்ட விண்ணப்பங்களுக்கும் பொருந்தும் என்பதால், காலாவதியானால் புதிய படிவத்தில் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
விசா விண்ணப்பம் ஏற்கப்பட்டாலும் சரி, நிராகரிக்கப்பட்டாலும் சரி, செலுத்திய கட்டணம் எந்தக் காரணத்திற்காகவும் திரும்பத் தரப்படாது என மலேசிய குடிவரவுத் துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பயணத் திட்டத்தை மாற்றினாலோ அல்லது விதிகளில் மாற்றம் வந்தாலோ பணம் திரும்பக் கிடைக்காது. மேலும், மலேசியா செல்லும் பயணிகள் தங்களது பயணக் காலத்திற்கு ஏற்ற மருத்துவக் காப்பீட்டை (MyTripPass) எடுத்துக்கொண்டு, அதை விசா விண்ணப்பத்துடன் துணை ஆவணமாக இணைப்பது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.