பிஸ்லெரி குடிநீரில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருட்கள்: சட்ட நடவடிக்கைக்கு FSSAI பச்சைக்கொடி!
பிஸ்லெரி பாட்டில் குடிநீர் மாதிரிகளில் புரோமேட் மற்றும் PAH ஆகிய ஆபத்தான வேதிப்பொருட்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, அந்நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையம் (FSSAI) ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டின் முன்னணி பாட்டில் குடிநீர் நிறுவனமான பிஸ்லெரியின் குடிநீரில் புற்றுநோயை உண்டாக்கும் அபாயமுள்ள வேதிப்பொருட்கள் இருப்பது ஆய்வகப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006-ன் கீழ் அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையம் (FSSAI) அனுமதி வழங்கியுள்ளது. கோவாவில் உள்ள பிஸ்லெரி ஆலையில் கடந்த 2025 செப்டம்பர் மாதம் சேகரிக்கப்பட்ட ஆறு மாதிரிகளில் ஒன்றில் இந்தக் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது.
முதற்கட்ட ஆய்வில், அந்தக் குடிநீரில் அனுமதிக்கப்பட்ட அளவான 10 மைக்ரோகிராமை விட அதிகமாக, 12 மைக்ரோகிராம் புரோமேட் இருப்பது தெரியவந்தது. தண்ணீரைச் சுத்திகரிக்க ஓசோன் பயன்படுத்தும்போது உருவாகும் இந்தப் புரோமேட், தொடர்ந்து உடலில் சேர்ந்தால் சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிப்பதுடன் புற்றுநோய் அபாயத்தையும் ஏற்படுத்தும். இதனை எதிர்த்து பிஸ்லெரி நிறுவனம் மேல்முறையீடு செய்ததை அடுத்து, அந்த மாதிரி மேல்முறையீட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இரண்டாம் கட்டப் பரிசோதனையில், அந்தத் தண்ணீரில் 'பாலிநியூக்ளியர் அரோமேடிக் ஹைட்ரோகார்பன்' (PAHs) என்ற மற்றொரு ஆபத்தான வேதிப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இது மரபணு மாற்றங்களை ஏற்படுத்தி நுரையீரல், தோல், சிறுநீர்ப்பை மற்றும் இரைப்பைப் புற்றுநோய்களை உருவாக்கும் தன்மை கொண்டது. இரண்டு ஆய்வகங்களின் முடிவுகளும் அந்தக் குடிநீர் பாதுகாப்பற்றது என்பதை உறுதிப்படுத்திய பிறகே சட்ட நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக FSSAI விளக்கம் அளித்துள்ளது.
இதற்கிடையில், இது குறித்துப் பதிலளித்துள்ள பிஸ்லெரி நிறுவனம், தங்கள் குடிநீர் எப்போதும் பாதுகாப்பானது என்றும், தனியார் ஆய்வகப் பரிசோதனையில் புரோமேட் அளவு சரியாகவே இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. தங்களுக்கு இதுவரை அதிகாரப்பூர்வ நோட்டீஸ் எதுவும் வரவில்லை என்றாலும், FSSAI விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தையில் உள்ள அனைத்து பாட்டில் குடிநீர் நிறுவனங்களின் தயாரிப்புகளையும் தீவிரமாக ஆய்வு செய்ய உணவுப் பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.