TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

தாஜ்மஹாலை முற்றுகையிட்ட 500-க்கும் மேற்பட்ட குரங்குகள் – அலறியடித்து ஓடிய சுற்றுலாப் பயணிகள்!

Share This Article:

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக சுற்றித் திரிந்ததால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனர். உணவுப் பொருட்கள் மற்றும் பைகளைப் பறிக்க சுற்றுலாப் பயணிகளை குரங்குகள் துரத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தாஜ்மஹாலை முற்றுகையிட்ட 500-க்கும் மேற்பட்ட குரங்குகள் – அலறியடித்து ஓடிய சுற்றுலாப் பயணிகள்!

உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மஹாலைப் பார்வையிட தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் வளாகத்தில் நூற்றுக்கணக்கான குரங்குகள் கூட்டமாகச் சுற்றித் திரிவது சுற்றுலாப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தாஜ்மஹாலின் பல்வேறு நுழைவாயில் பகுதிகளில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக ஆக்கிரமித்துள்ளதால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை தாஜ்மஹாலின் கிழக்கு, மேற்கு மற்றும் ராயல் நுழைவாயில்களைச் சுற்றியுள்ள புல்வெளிப் பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாகக் காணப்பட்டன. திடீரென இவ்வளவு அதிகமான குரங்குகள் ஒரே இடத்தில் திரண்டதால் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக, குடும்பத்துடன் வந்திருந்தவர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குரங்குகளைக் கண்டு அச்சமடைந்து அங்கிருந்து விலகிச் சென்றனர்.

சுற்றுலாப் பயணிகளைத் துரத்தும் குரங்குகள்

தாஜ்மஹாலுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் கைகளில் இருக்கும் உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பைகளைப் பறிப்பதற்காக குரங்குகள் அவர்களைத் துரத்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. குரங்குகள் கூட்டமாகச் சூழ்ந்ததால் சில சுற்றுலாப் பயணிகள் அலறியடித்து ஓடியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் முக்கியமான சுற்றுலாத் தலத்தில் இத்தகைய நிலை ஏற்பட்டிருப்பது பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் குரங்குகளால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சுற்றுலாப் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு

தாஜ்மஹால் வளாகத்தில் குரங்குகளின் தொல்லை தற்போது ஏற்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. கடந்த சில மாதங்களாகவே குரங்குகள் சுற்றுலாப் பயணிகளைத் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த ஜூலை மாதம் தென்கொரியாவைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் குரங்கு கடித்ததில் காயமடைந்தார்.

அதேபோல், கடந்த செப்டம்பர் மாதம் தாஜ்மஹாலைப் பார்வையிட வந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த 83 வயது முதியவர் உள்ளிட்ட இருவர் குரங்குகள் கடித்ததில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் தாஜ்மஹாலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்துள்ளது.

குரங்குகள் அதிகரிக்க என்ன காரணம்?

தாஜ்மஹால் வளாகத்திற்குள் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகள் நுழைவாயில் பகுதிகளில் உள்ள குப்பைத்தொட்டிகளில் உணவுப் பொருட்களை வீசிவிட்டுச் செல்கின்றனர். அந்த உணவுகளைத் தேடி வரும் குரங்குகள் நுழைவாயில் மற்றும் புல்வெளிப் பகுதிகளில் அதிக அளவில் முகாமிடத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், தாஜ்மஹால் வளாகத்தில் அதிக அளவில் பசுமைப் பகுதிகள் இருப்பதும் குரங்குகள் அங்கு அதிகமாகத் திரள்வதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் குரங்குகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குரங்குகளை விரட்ட அதிகாரிகள் நடவடிக்கை

தாஜ்மஹால் வளாகத்தில் குரங்குகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் பணியாளர்களுக்கு உண்டிகோல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், குரங்குகளை விரட்டும் வகையில் 15 அல்ட்ராசோனிக் கருவிகளைப் பொருத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இருப்பினும், குரங்குகளைப் பிடித்து அப்புறப்படுத்துவது தொடர்பான பொறுப்பு ஆக்ரா மாநகராட்சி நிர்வாகத்திடம் இருப்பதாகவும், தாஜ்மஹால் வளாகத்திற்குள் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை இந்திய தொல்லியல் துறை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு துறைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பில் சிக்கல்கள் இருப்பதால் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தாஜ்மஹாலில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருவது சுற்றுலாப் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் இந்த இடத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions