"இது படமல்ல; அறியாத பூகோளம்!" - 'Apex' ஆங்கிலப் படத்தை உச்சிமுகர்ந்த கவிஞர் வைரமுத்து!
ஓடிடியில் வெளியான 'Apex' ஆங்கிலப் படத்தைப் பார்த்த கவிஞர் வைரமுத்து, ஒரு பெண்ணின் மன உறுதியையும் படத்தின் பிரம்மாண்டத்தையும் பாராட்டி தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ஆங்கிலத் திரைப்படம் 'Apex'. இந்தப் படத்தைப் பார்த்த கவிஞர் வைரமுத்து, தனது பாணியில் படத்தைப் பாராட்டி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "ஓர் ஆங்கிலப் படம் பார்த்தேன் 'Apex'. கதை என்னவோ சிறியதுதான்; களம் பெரிது; காட்சி பெரிதினும் பெரிது" எனப் படத்தின் மேக்கிங்கை வியந்துள்ளார்.
பெண்ணின் மன உறுதி
படத்தின் மையக்கருத்தைப் பற்றி அவர் கூறுகையில், "அவள் ஒரு மலையேறி. எட்டாத சிகரங்களை ஏறித் தொடுவதே அவள் லட்சியம். ஒரு மலையேற்றத்தில் தான் கணவனையே இழக்கிறாள். ஆனாலும் லட்சியத்தை இழந்தாளில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார். ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்தப் படம் ஒரு சாட்சி என்பதை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
திகிலூட்டும் திருப்பங்கள்
அதே சிகரத்தைத் தொட அந்தப் பெண் தனியாக முயலும்போது ஏற்படும் சவால்களை வைரமுத்து விவரித்துள்ளார். "அத்துவானக் காட்டில் ஒரு மனிதன் துணைக்கு வருகிறான். போகப் போகத் தெரிகிறது அவன் ஒரு 'நரமாமிசம் தின்னி' என்று. அவன் துரத்தலிலிருந்து மீள்வதும், தொட நினைத்த சிகரத்தைத் தொடுவதும் மிச்சக் கதையின் உச்சம்" எனப் படத்தின் விறுவிறுப்பான பகுதிகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அறியாத பூகோளம்
படத்தின் காட்சிகளால் ஈர்க்கப்பட்ட வைரமுத்து, "காட்சிகளின் சாகசத்தில் உயிர் திரண்டு கண்ணில் தேங்கிவிடுகிறது. உடலும் மனமும் உறுதிப்பட்டால் ஒரு பெண் எதையும் சாதிப்பாள் என்ற பெருமிதம் எழுகிறது. இதுவொரு படமல்ல; அறியாத பூகோளம்; அடையாத அனுபவம்" என நெகிழ்ச்சியுடன் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.