விஜய்யை அன்று 'கழுவி ஊற்றிய' சமுத்திரகனி.. இன்று அவரே சொன்ன 'அந்த' வார்த்தை! நெகிழ்ச்சியில் தவெக தொண்டர்கள்!
திரிஷா விவகாரத்தில் விஜய்யை ஒரு காலத்தில் மிகக் கடுமையாக விமர்சித்த இயக்குனர் சமுத்திரகனி, தற்போது விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள நிலையில் அவரை மனதாரப் பாராட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது விஜய்யின் தமிழக வெற்றி கழகம். ஆட்சியை அமைக்கத் தேவையான 118 இடங்களைப் பெற இன்னும் சில எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளன. இன்று திருமாவளவனின் விசிகவும் தனது ஆதரவை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், விஜய் விரைவில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.
சமுத்திரகனியின் வாழ்த்து மழையும்.. பழைய பகையும்!
விஜய்யின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். இதில் குறிப்பாக இயக்குனர் சமுத்திரகனியின் வாழ்த்து இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்
"பல தடைகளைத் தாண்டி இப்போது ஆட்சியமைக்க இருக்கும் என் அன்பு சகோதரர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த நாளுக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தேன். ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
'அன்று' கொதித்தெழுந்த கனி: பின்னணி என்ன?
விஜய் மீது இப்போது பாசத்தைப் பொழியும் சமுத்திரகனி, சில காலத்திற்கு முன்பு விஜய்யை மிகக் கடுமையாகச் சாடியிருந்தார். விஜய்யின் மனைவி சங்கீதா அவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றதாகக் கூறப்பட்ட சமயத்தில், விஜய்யும் நடிகை திரிஷாவும் ஒரே மாதிரியான உடை அணிந்து ஒரு திருமணத்திற்கு ஒன்றாக வந்திருந்தனர்.
இந்த விவகாரம் குறித்து இயக்குநர்கள் பாலா, ஆர்.வி. உதயகுமார் முன்னிலையில் பேசிய சமுத்திரகனி, "என்ன நினைத்து இப்படி செய்தாய்? எதுவாக இருந்தாலும் நாலு சுவற்றுக்குள் வைத்துக்கொள். இப்பதான் எல்லாம் நல்லா வந்துகொண்டு இருந்தது. கட்சியில் இருப்பவர்களே இதற்கெல்லாம் எங்களால் முட்டு கொடுக்க முடியாது எனப் புலம்புகிறார்கள்" என்று ஆவேசமாகப் பேசியிருந்தார். அந்த வீடியோ அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
"வெல்வோம் சகோதரா!" - தற்போதைய ஆதரவு
அன்று விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துக் கவலைப்பட்ட அதே சமுத்திரகனி, இன்று அரசியல் ரீதியாக விஜய் அடைந்துள்ள உயரத்தைக் கண்டு பூரிப்படைந்துள்ளார். "சகோதரா இன்னும் நிறைய தடைகள் வரும். அதையெல்லாம் நீங்கள் உடைக்க வேண்டும் என்று நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். பெரிதாக வெல்ல வேண்டும். வெல்வோம்" என்று தனது வாழ்த்தின் மூலம் பழைய கசப்புகளை மறந்து விஜய்க்குப் பக்கபலமாக நிற்பதை உறுதி செய்துள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.