ரூ. 25 லட்சம் காப்பீடு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்: புதுச்சேரி தவெக பரப்புரையில் விஜய் கொடுத்த அதிரடி வாக்குறுதிகள்!
அனுபவம் இல்லை என்பவர்களுக்குச் செயலில் பதில் சொல்வோம்!" - தவெக தலைவர் விஜய் அதிரடி முழக்கம்! புதுச்சேரி-"மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களும், இருப்பவர்களும் புதுச்சேரிக்கு ஏன் இன்னும் மாநில அந்தஸ்து வழங்கவில்லை?" என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தட்டாஞ்சாவடி மார்க்கெட் பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் விஜய் கலந்துகொண்டார். காவல்துறையின் நேரக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், உற்சாகமான ரோடு ஷோ மூலம் மேடையை அடைந்த அவர், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
கூட்டணிகள் மீது சரமாரி விமர்சனம்
தற்போது புதுச்சேரி அரசியலில் உள்ள இரண்டு முக்கிய கூட்டணிகளையும் விஜய் கடுமையாகச் சாடினார்
திமுக - காங்கிரஸ் கூட்டணி: "இந்தக் கூட்டணியில் உள்ள ஒரு தலைவர், தனது சொந்தத் தலைமையையே ஏமாற்றியதை உலகம் பார்த்துச் சிரித்தது. இப்போது பெயருக்குக் கூட்டணியில் இருந்தாலும், ஒருவரை ஒருவர் எதிர்த்து நின்று மக்களைக் குழப்புகிறார்கள்," என விமர்சித்தார்.
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி: "இது சேர்ந்த கூட்டணி கிடையாது, சோர்ந்து போன கூட்டணி. மாநில அந்தஸ்து குறித்துப் பேசினால் எனக்கு அனுபவம் இல்லை என்கிறார்கள். ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பே சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தியும், இதுவரை ஏன் மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.
தவெக-வின் அதிரடி வாக்குறுதிகள்
புதுச்சேரியில் முதல்முறையாகத் தனித்துப் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றால் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களைப் பட்டியலிட்டார்:
மாநில அந்தஸ்து-புதுச்சேரிக்கு 100% மாநில அந்தஸ்து பெற்றுத் தர முழு முயற்சி எடுக்கப்படும்.
உள்ளாட்சித் தேர்தல்: தவெக ஆட்சிக்கு வந்தவுடன் காலதாமதமின்றி உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.
வேலைவாய்ப்பு: அரசுத் துறைகளில் உள்ள அனைத்துக் காலிப் பணியிடங்களும் போர்க்கால அடிப்படையில் நிரப்பப்படும்.
காப்பீடுத் திட்டம்: ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ. 25 லட்சம் மதிப்பிலான காப்பீடு வழங்கப்படும்.
"மக்களோடு நிற்பவர்களுக்கே வாய்ப்பு"
"மக்களோடு மக்களாகக் களத்தில் நிற்பவர்களைத் தான் வேட்பாளர்களாகத் தேர்வு செய்துள்ளேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதில்லை. ஏமாற்று கூட்டணிகளுக்கு வாக்களிப்பது வீண். தமிழகத்திலும் புதுச்சேரியிலும் தவெக ஆட்சி அமைய ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்," எனத் தனது உரையை விஜய் நிறைவு செய்தார்.
தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், விஜய்யின் இந்தப் பரப்புரை புதுச்சேரி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.