"என்னை வச்சு டெஸ்ட் பண்றாங்க!" - அக்கா ராதிகா மற்றும் அவர் மகளால் நேர்ந்த கொடுமை: நடிகை நிரோஷா ஜாலி பேட்டி!
நடிகை ராதிகா மற்றும் அவரது மகளால் தான் அனுபவித்த வேடிக்கையான கஷ்டங்கள் குறித்து நடிகை நிரோஷா சமீபத்திய பேட்டியில் கலகலப்பாக பகிர்ந்துள்ளார். "எங்க வீட்டில் நான் தான் இளிச்சவாய்" என்று அவர் கூறியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் 80, 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நிரோஷா. தற்போது சின்னத்திரையில் பிஸியாக நடித்து வரும் அவர், தனது குடும்பத்தினர் குறித்து பகிர்ந்துள்ள சுவாரஸ்யமான தகவல் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது. குறிப்பாக தனது அக்கா ராதிகா மற்றும் அவரது மகள் குறித்து அவர் பேசியுள்ளார்.
ஒருமுறை ராதிகா மூக்கு குத்திக் கொள்வதற்காக நிரோஷாவை துணைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்ற இடத்தில் ஒரு பெண் மூக்கு குத்தும் போது வலியால் துடித்ததைப் பார்த்த ராதிகா பயந்து பின்வாங்கியுள்ளார். ஆனால், நிரோஷாவை விடாமல், "நீ உட்கார்ந்து குத்திக்கொள்" என்று கட்டாயப்படுத்தி அவருக்கு மூக்கு குத்தி விட்டாராம். இறுதியில் ராதிகா மூக்கு குத்தாமலேயே வீடு திரும்பியுள்ளார்.
ராதிகா மட்டுமல்லாது, அவரது மகளும் இதே பாணியில் நிரோஷாவை 'லாக்' செய்துள்ளார். காதில் இரண்டாவது ஓட்டை (Second Piercing) போட வேண்டும் என்று ஆசையாக நிரோஷாவை அழைத்துச் சென்ற ராதிகாவின் மகள், கடைசியில் பயத்தில் பின்வாங்கியுள்ளார். அங்கும் நிரோஷாவையே உட்கார வைத்து காது குத்தி அழகு பார்த்துள்ளனர்.
இந்த அனுபவங்களை சிரிப்புடன் பகிர்ந்த நிரோஷா, "எங்க வீட்டில் நான் தான் இளிச்சவாய் போல. எதா இருந்தாலும் என்னை வைத்து தான் முதலில் டெஸ்ட் பண்ணுவாங்க. என்ன ரீசன்னே தெரியல, எல்லாரும் என்னையே மாட்டிவிடுறாங்க" என்று கலகலப்பாகக் கூறினார்.
தற்போது விஜய் டிவியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் நடித்து வரும் நிரோஷாவின் இந்த எதார்த்தமான பேச்சுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. "ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருத்தர் இப்படித்தான் அப்பாவியாக இருப்பார்கள்" என நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.