அட்லீ – அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படப்பிடிப்பில் புதிய மாற்றம்: அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா?
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘ராக்கா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. துபாயில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த முக்கியக் காட்சிகள் தற்போது ஹைதராபாத்தில் படமாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இயக்குநர் 'அட்லீ' இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படமான ‘ராக்கா’ படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
‘ராக்கா’ திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்களும் இப்படத்தின் நட்சத்திரப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு இடத்தில் மாற்றம்
‘ராக்கா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, அடுத்தகட்டப் படப்பிடிப்பை துபாயில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அந்தத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, துபாயில் படமாக்கத் திட்டமிடப்பட்டிருந்த முக்கியமான காட்சிகளை ஹைதராபாத்தில் உள்ள 'ராமோஜி' திரைப்பட நகரில் படமாக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நடிகர் அல்லு அர்ஜுனுக்கும் படப்பிடிப்பில் பங்கேற்பது எளிதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது
பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள்
இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்காக பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் உருவாக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, படத்தின் இடைவேளைக் காட்சியில் இடம்பெறவுள்ள ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இப்படத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 37 கலைஞர்களை ஒரே நேரத்தில் மோஷன் கேப்சர் முறையில் படம்பிடித்து படக்குழுவினர் சாதனை படைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பான் வேர்ல்ட் திரைப்படமாக உருவாகும் ‘ராக்கா’
அறிவியல் புனைகதை மற்றும் கற்பனை அம்சங்களுடன் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராக்கா’ திரைப்படம் இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச ரசிகர்களையும் கவரும் வகையில் தயாராகி வருகிறது.
படத்தின் காட்சியமைப்பு மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இப்படம் 2027ஆம் ஆண்டின் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

0 Comments
No comments yet. Be the first to comment.