‘டோரதி’ ஒரு பேரழகுத் திரைக்காவியம் – படக்குழுவினரைப் பாராட்டிய சீமான்!
சமூகத்தில் பேசத் தயங்கும் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படத்தைப் பாராட்டிய சீமான், இயக்குநர், நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
1990-களில் சாதிய வன்முறை நிலவிய கிராமப்புறத் தமிழகத்தின் பின்னணியில், சமூகத்தில் பலரும் பேசத் தயங்கும் ''மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை'' மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இந்தப் படத்தைப் பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றதுடன், தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’
மதுரையைப் பின்னணியாகக் கொண்டு 1990-களில் நடைபெறும் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம், சாதியப் பாகுபாடு, ஆணாதிக்கம், சமூக ஒடுக்குமுறை மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பேசுகிறது. சிறுவயது முதல் நெருங்கிய நண்பர்களாக வளரும் இரு இளைஞர்களின் வாழ்க்கையின் வழியாகப் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை இப்படம் எடுத்துரைக்கிறது.
குறிப்பாக, சனந்த் தனது கதாபாத்திரத்திற்காக வெளிப்படுத்திய நடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 'ஆணாகவும் பின்னர் திருநங்கையாகவும்' மாறும் கதாபாத்திரத்தின் உணர்வுகளையும் உடல்மொழியையும் இயல்பாக வெளிப்படுத்தியிருப்பதாகப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. அதேபோல், ரிஷிகாந்தின் நடிப்பும், டோரதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷின் பங்களிப்பும் படத்திற்கு வலுசேர்த்துள்ளன.
சீமான் வெளியிட்ட பாராட்டுப் பதிவு,
இந்நிலையில், இப்படத்தைப் பார்த்த சீமான் தனது எக்ஸ் தளப் பதிவில், பேசத் துணியாத கதையைப் பேரழகுத் திரைக்காவியமாக உருவாக்கியுள்ள ‘டோரதி’ படக்குழுவினருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், 1990-களில் சாதிய வன்முறை நிலவிய கிராமப்புறத் தமிழகத்தைப் பின்னணியாகக் கொண்டு, சமூகம் பேசத் தயங்கும் ஒரு முக்கியமான கருப்பொருளைத் துணிச்சலுடன் கையில் எடுத்துக் கொண்டு, உணர்வும் உயிர்ப்பும் நிறைந்த திரைப்படமாக உருவாக்கியுள்ள இயக்குநர் கார்த்திக் சுப்புராஜைப் பாராட்டியுள்ளார்.
மனிதர்களை அவர்களது இயல்போடும் உணர்வுகளோடும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்ப்பதே கலையின் உயர்ந்த நோக்கம் என்றும், புறக்கணிக்கப்படும் மக்களின் வலியையும் அவர்களது வாழ்வுரிமையையும் சமூகத்தினர் புரிந்துகொள்ள உதவும் படைப்புகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜாவின் 'இசைக்கும் பாராட்டு'
இப்படத்திற்கு இசையமைத்துள்ள இளையராஜாவின் இசை, திரையில் வெளிப்படுத்தப்படும் உணர்வுகளுக்கு உயிரூட்டி, திரைப்படத்தை ஒரு காவிய அனுபவமாக உயர்த்தியுள்ளதாக ''சீமான் பாராட்டியுள்ளார்''. தலைமுறைகள் மாறினாலும் மனிதர்களின் மனதைத் தொடும் அவரது இசையின் வலிமை என்றும் குறையாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சனந்த், ரிஷிகாந்த், முத்துக்குமார், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பையும், ஒளிப்பதிவாளர் திருவின் பங்களிப்பையும் பாராட்டியுள்ளார். இப்படத்தைச் சாத்தியப்படுத்திய தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, சாதியப் பாகுபாடு, பாலினப் பாகுபாடு மற்றும் சமூக ஒடுக்குமுறைகளைக் கடந்து, மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையையும் உணர்வுகளையும் பொதுச் சமூகம் புரிந்துகொள்ள உதவும் இதுபோன்ற அர்த்தமுள்ள படைப்புகள் தமிழ்த் திரையுலகில் மேலும் உருவாக வேண்டும் என்றும், ‘டோரதி’ மக்களின் பேரன்பைப் பெற வேண்டும் என்றும் சீமான் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.