மேற்கு வங்கத்தில் ஓயந்தது 2-ம் கட்ட தேர்தல் பரப்புரை: நாளை மறுநாள் 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு!
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்ரல் 29) வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது.
மேற்கு வங்காளத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ம் தேதி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ளது.
இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்ரல் 29, புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
- மொத்த தொகுதிகள்: 142
- வாக்குப்பதிவு நாள்: ஏப்ரல் 29, 2026
- முந்தைய கட்டம்: கடந்த ஏப்ரல் 23-ம் தேதி 152 தொகுதிகளில் முதற்கட்டத் தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
- வாக்கு எண்ணிக்கை: இரண்டு கட்டங்களிலும் பதிவான வாக்குகள் வரும் மே மாதம் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பரப்புரை ஓய்ந்ததைத் தொடர்ந்து, தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளி நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதுடன், துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாகத் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.