மேகதாட்டு அணை குறித்து விவாதிக்க சதி? டெல்லி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
தமிழகத்தில் புதிய அரசு அமைய உள்ள நிலையில், மேகதாட்டு அணை குறித்து ஒருதலைப்பட்சமாக விவாதிக்க வாய்ப்புள்ளதால் டெல்லியில் நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாட்டு அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் நாளை மறுநாள் (ஏப்ரல் 29) காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-வது கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்து, இன்னும் புதிய அரசுகள் பொறுப்பேற்கவில்லை. இத்தகைய சூழலில் கொள்கை முடிவுகளை எடுக்க முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளனர். இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி, மேகதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசு தனக்குச் சாதகமான முடிவுகளை எடுக்க இந்த கூட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாட்டு அணை கட்டுவது குறித்து விவாதிக்க கர்நாடகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. தற்போதுள்ள அரசியல் இடைவெளி காலத்தில் இக்கூட்டம் நடைபெற்றால், அது தமிழகத்தின் உரிமைகளைப் பாதிக்கும் என்றும், ஒருதலைப்பட்சமான விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்கும் வரை இந்தக் கூட்டத்தைத் தள்ளி வைக்க வேண்டும் அல்லது இக்கூட்டத்தில் மேகதாட்டு அணை குறித்து எந்த விவாதமும் நடத்தப்படாது என்ற உறுதிமொழியை ஆணையம் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.