தனுஷின் 'கர' படத்திற்கு திடீர் தடை கோரி வழக்கு: ஏப்ரல் 30 ரிலீஸில் சிக்கலா? ரசிகர்கள் அதிர்ச்சி!
தனுஷ் நடிப்பில் ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியாகவுள்ள 'கர' திரைப்படத்திற்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைப்பு தொடர்பான இந்தச் சிக்கலால் படம் திட்டமிட்டபடி ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
'போர்த்தொழில்' புகழ் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், தனுஷ் - மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கர'. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர், தனுஷின் 'திருடன்' கதாபாத்திரம் மற்றும் 1990-களின் பின்னணி எனப் பல காரணங்களால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் சட்டச் சிக்கல்
படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வேங்கை அய்யனார் என்ற தயாரிப்பாளர் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், 'கரா' (Kara) என்ற தலைப்பைத் தான் ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய அனுமதியின்றி அதே தலைப்பைப் பயன்படுத்தியுள்ளதால், படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு நாளை (ஏப்ரல் 29) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்கள் கவலை
நேற்று சென்னையில் நடைபெற்ற பிரீ-ரிலீஸ் ஈவென்ட் மிகக் கோலாகலமாக நடந்த நிலையில், இந்தத் திடீர் வழக்கு தனுஷ் ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில் 'இட்லி கடை' மட்டுமே சுமாரான வெற்றியைப் பெற்றதால், இந்தப் படத்தின் வெற்றியை அவர் பெரிதும் நம்பியுள்ளார்.
ரிலீஸ் தள்ளிப் போகுமா?
வழக்கமாக இது போன்ற தலைப்புச் சிக்கல்கள் நீதிமன்றத்திற்கு வரும்போது, படக்குழு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவே முயற்சிக்கும். நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப்போகிறது என்பதைப் பொறுத்தே ஏப்ரல் 30-ஆம் தேதி படம் திரையரங்குகளுக்கு வருமா என்பது உறுதியாகும்.

0 Comments
No comments yet. Be the first to comment.