ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த ‘மார்க் 84’ மிரட்டல்! இஸ்ரேலுக்கு பறந்த 1800 மெகா குண்டுகள்.. பின்னணி என்ன?
ஈரானுடனான அணு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து அமெரிக்கா பின்வாங்கியுள்ள நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள ‘மார்க் 84’ குண்டு புகைப்படம் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான அணு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து அமெரிக்கா முழுமையாக பின்வாங்குவதாக அறிவித்துள்ளார். இந்த அதிரடி அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சர்ச்சை புகைப்படம்
டிரம்ப் பகிர்ந்துள்ள அந்தப் புகைப்படத்தில், அமெரிக்க போர் விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள பிரம்மாண்டமான 'மார்க் 84' (Mark 84) ரக குண்டு ஒன்று இடம் பெற்றுள்ளது. அதில் டிரம்பின் பிரபலமான வசனமான "Thank you for your attention to this matter" (இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி) என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இது ஈரானுக்கு நேரடியாக விடுக்கப்பட்ட ராணுவ மிரட்டலாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் ராணுவ வலிமையை ஈரானுக்கு நினைவூட்டும் வகையிலேயே டிரம்ப் இதனைப் பதிவிட்டுள்ளதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஏன் இந்த 'மார்க் 84' குண்டு இவ்வளவு ஆபத்தானது?
அமெரிக்க ராணுவத்தால் 'டம்ப் பாம்' (Dump Bomb) என்றும், 'பங்கர் பஸ்டர்' (Bunker Buster) என்றும் அழைக்கப்படும் இந்த மார்க் 84 குண்டு தன்னுள் அசுர வலிமையைக் கொண்டது.
- அதிர்ச்சி தரும் எடை: சுமார் 2,000 பவுண்ட் (900 கிலோ) எடையுடையது. இதில் 945 பவுண்ட் உயர் ரக வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருக்கும்.
- தாக்கும் திறன்: தடிமனான கான்கிரீட் மற்றும் நிலத்தடி உலோகச் சுவர்களைத் துளைத்து உள்ளே சென்று வெடிக்கும் திறன் கொண்டது.
- சேதத்தின் அளவு: இந்த குண்டு ஒரு இடத்தில் விழுந்தால், அங்கு 15 மீட்டர் ஆழத்திற்கு ராட்சத குழி ஏற்படும். மேலும், விழுந்த இடத்தில் இருந்து 120 மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்தும் தரைமட்டமாகும்.
ஈரானுக்குக் காத்திருக்கும் ஆபத்து
வியட்நாம் போரில் இருந்தே பயன்பாட்டில் இருக்கும் இந்த மார்க் 84 குண்டுகள், மிகக் குறைந்த செலவில் மிகப்பெரிய உள்கட்டமைப்புகளை அழிக்க வல்லவை. இதன் மூலம் ஈரானின் அணு உலைகள், ராணுவ தளங்கள் மட்டுமின்றி பாலங்கள், விமான நிலையங்கள் மற்றும் ஏவுகணை கட்டமைப்புகள் போன்ற பொது உள்கட்டமைப்புகளையும் எளிதில் குறிவைக்க முடியும் என்பதால் ஈரான் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் உருவாகியுள்ளது.
இஸ்ரேல் கைக்கு வந்த 1800 குண்டுகள்
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த குண்டு அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்பதால், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் இதன் வெளிநாட்டு விற்பனைக்குத் தற்காலிகத் தடை விதித்திருந்தது. ஆனால், 2025-ல் டிரம்ப் மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றதும் இந்தத் தடையை அதிரடியாக நீக்கினார். இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் அழுத்தத்தினால், ஈரானின் கோரிக்கைகளை நிராகரித்த டிரம்ப், இஸ்ரேலுக்கு சுமார் 1,800 மார்க் 84 குண்டுகளை அனுப்ப அனுமதி வழங்கியுள்ளார்.
டிரம்பின் இந்த அணு ஒப்பந்தப் பின்வாங்கலும், 'மார்க் 84' குண்டு மிரட்டலும் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.